Friday, November 12, 2010

தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் 20% ஒதுக்கீடு

சென்னை : தமிழ் மொழியில் படித்தவர்களுக்கு அரசு பணிகளில் 20 சதவீதம் ஒதுக்கீடு அளிக்கும் சட்டமசோதா , பேரவையில் நேற்று நிறைவேறியது. 
 தமிழ் மொழி மூலமாக படித்தவர்களை அரசின் குறிப்பிட்ட பணிகளில் முன்னுரிமை அடிப்படையில் நியமனம் செய்யும் சட்டமசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீது விவாதம் நடந்தது. இதில் வேல்முருகன் (பாமக) பேசியதாவது: இந்த சட்டத்தை பாமக வரவேற்கிறது. தமிழ்மொழியில் படித்தவர்களுக்கு அரசு பணிகளில் 20 சதவீதம் முன்னுரிமை வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும். 
வி.பி.கலைராஜன் (அதிமுக): இந்த சட்டமசோதாவில் சில திருத்தங்களை கொண்டு வர வேண்டும். தமிழ்மொழியில் படித்தவர்களுக்கு 80 சதவீதம் முன்னுரிமை வழங்கவேண்டும். 
சிவபுண்ணியம் (இந்திய கம்யூனிஸ்ட்): இந்த சட்டத்தை வரவேற்கிறோம். 50 சதவீதம் அல்ல, 75 சதவீதமாக கூட உயர்த்தலாம். இந்த மசோதாவை, ஞானசேகரன் (காங்), ஜி.கே.மணி (பாமக), நன்மாறன் (மார்க்சிஸ்ட்), டாக்டர் சதர்ன் திருமலைக்குமார் (மதிமுக), ரவிக்குமார் (விடுதலை சிறுத்தைகள்) ஆகியோரும் வரவேற்றனர். 

இந்த விவாதத்திற்கு பிறகு, அமைச்சர் துரைமுருகன் அளித்த பதில்: இந்த சட்டத்தை முதல்வர் கருணாநிதி பெருமிதத்துடன் கொண்டுவந்துள்ளார். 20 சதவீதத்திற்கும் அதிகமாக ஒதுக்க வேண்டும் என்று இங்கே பேசினார்கள். இதில் சில சட்ட நெளிவு சுளிவுகளை பார்க்க வேண்டும். தமிழ்மொழியில் படித்தவர்களுக்கு 100 சதவீதம் முன்னுரிமை வழங்கும் நிலை ஒரு காலத்தில் வந்தே தீரும். தமிழ் உணர்வோடு இந்த வயதிலும் முதல்வர் இந்த சட்டத்தைக் கொண்டுவந்துள்ளதை நான் பாராட்டுகிறேன்.
அமைச்சரின் பதிலுரைக்கு பிறகு மசோதா நிறைவேறியது. 

முடிந்தது மழைக்கால தொடர்: தமிழக சட்டப் பேரவையின் மழைக்கால கூட்டம் கடந்த 8ம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. கடைசி நாளான நேற்று காலை பேரவை கூட்டம் காலை 9.30 மணிக்கு தொடங்கி பிற்பகல் 2.41 மணிக்கு முடிந்தது. ‘பேரவையில் உறுப்பினர்கள் காரசாரமாக பேசினாலும், அவை அமைதியாக நடக்க உதவியதற்காக நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றும், பேரவையின் கூட்டம் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகிறது’ என்றும் பேரவை தலைவர் ஆவுடையப்பன் தெரிவித்தார். 
காவல் சட்டமசோதா ஆய்வுக்கு மேலும் அவகாசம்: ‘2008ம் ஆண்டு தமிழ்நாடு காவல் சட்டமசோதா’வை ஆய்வு செய்து பேரவைக்கு அறிக்கை அளிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு தனது அறிக்கையை அளிக்க காலவரையினை மேலும் 6 மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இதற்கான தீர்மானத்தை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரவையில் நேற்று முன்மொழிந்தார். பின்னர் அந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
‘2008ம் ஆண்டு பிஎஸ்ஜி பல்கலைக்கழக சட்டமசோதா மற்றும் 2008ம் ஆண்டு தியாகராயர் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலை கழக சட்டமசோதா ஆகியவை குறித்து ஆய்வு செய்து பேரவைக்கு அறிக்கை அளிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு தனது அறிக்கையை அளிக்க காலவரை மேலும் 6 மாதத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான தீர்மானத்தை உயர்கல்வி அமைச்சர் பொன்முடி கொண்டுவந்தார். பின்னர் அந்த தீர்மானம் பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

ஒரே  நாளில் 17 மசோதா

தமிழ் மொழி மூலமாக படித்தவர்களுக்கு அரசு பணிகளில் முன்னுரிமை அடிப்படையில் நியமனம், கூட்டுறவு சங்கங்களின் தனி அதிகாரிகளின் பதவி காலம் நீட்டிப்பு உள்பட 17 சட்ட திருத்த மற்றும் சட்ட மசோதாக்கள் பேரவையில் நிறைவேற்றப்பட்டன. இதில் 6 மசோதாக்கள் மீது விவாதம் நடத்தாமல் நிறைவேற்றப்பட்டது.

No comments:

Post a Comment