Saturday, November 13, 2010

இந்திய ஐ.டி., துறைக்கு நல்ல வாய்ப்பு: நாஸ்காம்

பெங்களூரு: ‘அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இந்திய வருகையால், இந்திய ஐ.டி., துறைக்கு அமெரிக்காவில் மீண்டும் நல்லதொரு வாய்ப்பு ஏற்படுவதற்கு வழி ஏற்படுத்தி கொடுத்துள்ளது’ என்று, ‘நாஸ்காம்’ தெரிவித்துள்ளது. ‘நாஸ்காம்’ அமைப்பு சார்பில், பெங்களூரில் கண்காட்சி நடக்கிறது. இதில் பங்கேற்ற இந்த அமைப்பின் தலைவர் சோம் மிட்டல், நிருபர்களிடம் கூறியதாவது: ஒபாமாவின் இந்திய பயணத்தால், இந்திய ஐ.டி., கம்பெனிகள் பற்றி அமெரிக்க அரசு கொண்டிருந்த எண்ணத்தில் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவுட்சோர்சிங் முறையில், அமெரிக்கர்களின் வேலைவாய்ப்புகளை இந்திய ஐ.டி., நிறுவனங்கள் திருடிப்பறிப்பதாக எண்ணம் கொண்டிருந்தனர். அப்படியல்ல, இரு நாடுகளுக்குரிய பொருளாதார, தொழில் வளர்ச்சிக்கு தேவையானவற்றை பரஸ்பரம் பெற்றுக்கொள்ளும் இரு வழிப்பாதை தான் என்பதை, அமெரிக்க அரசு உணர்ந்து விட்டது. இந்திய ஐ.டி., நிறுவனங்கள் என்றால், கால் சென்டர்கள், பன்னாட்டு நிறுவனங்களின் பேக்- ஆபீஸ்கள் தான் என்ற கருத்து உடைத்தெறியப்பட்டுள்ளது. இந்திய ஐ.டி., நிறுவனங்கள், அரசு மட்டத்தில் சேர்ந்து பணியாற்ற தயாராக உள்ளன என்ற செய்தி வெளிப்பட்டுள்ளது. இவ்வாறு சோம் மிட்டல் கூறினார்.

No comments:

Post a Comment