Monday, November 22, 2010

ஆசிரியர் நியமனம்: வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குளறுபடி அமலாக்கப்படுமா அருந்ததியினர் ஒதுக்கீடு?

ஆசிரியர் நியமனம்: வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 
குளறுபடி அமலாக்கப்படுமா அருந்ததியினர் ஒதுக்கீடு?




சென்னை: வேலைவாய்ப்பு அலுவலர்களின் குளறுபடியால் ஆசிரியர் நியமனத்தில் அருந்ததியினருக்கான 3 சதவீத உள்ஒதுக்கீடு முழுவதுமாக அமலாகாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக பட்டதாரிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்கும் பணிகளை ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொண்டு வருகிறது. இதற்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் நவம்பர் 15, 16 ஆகிய தேதிகளில் மாநிலம் முழுவதும் நடைபெற்றது.
ஒரு இடத்துக்கு 5 பேர் என்ற விகிதத்தில் சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பட்டதாரிகள் அழைக்கப்பட்டிருந்தனர்.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு மூப்பின் அடிப்படையில், அனைத்துப் பிரிவினருக்கும் இடஒதுக்கீட்டு முறையைப் பின்பற்றி இந்த பணி நியமனம் நடத்தப்படுகிறது.
பட்டதாரி ஆசிரியர் நியமனத்த்தில் அருந்ததியினருக்காக 165 இடங்களை ஒதுக்கி வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி ஆணையரகம் 27.09.10-ல் அறிவித்தது. அந்தப் பட்டியலில், குறிப்பிட்ட தேதிக்கு முன்னதாக பதிவு செய்தவர்கள் இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.
ஆனால், ஒரு சில மாவட்டங்களைத் தவிர பெரும்பாலான மாவட்டங்களில் தகுதிவாய்ந்த அருந்ததியின பட்டதாரிகளுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. வேலைவாய்ப்பு அலுவலர்களின் குளறுபடியால்தான் தங்களுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை என்று அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக, பாதிக்கப்பட்ட அருந்ததியினப் பட்டதாரிகள் "தினமணி' நிருபரிடம் கூறியது:
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி ஆணையரகத்துக்கு அருந்ததியின பட்டதாரிகளின் பெயர்களை அனுப்பிவிட்டதாக அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் தெரிவித்தனர். இதுதொடர்பாக, எங்களுக்குச் சான்றிதழையும் அங்கு அளித்தனர்.
சென்னையில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி ஆணையரகத்தில், நூற்றுக்கணக்கான அருந்ததியினத்தைச் சேர்ந்த பட்டதாரிகள் நேரில் சென்று விசாரித்தோம். ஆனால், எங்களுக்கு உரிய முறையில் யாரும் பதிலளிக்கவில்லை.
எங்களது பெயர் விவரங்களடங்கிய சி.டி.க்கள், இ-மெயில் ஆகியவற்றை வேலைவாய்ப்பு இயக்குநரகத்தில் பிரிக்கவேயில்லை. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் அனுப்பியிருந்த இ-மெயில்களையும் ஆணையரகத்தில் சரிபார்க்கவில்லை.
நாங்கள் சென்று கேட்டபிறகு, "உங்கள் அனைவருக்கும் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க தகுதி உள்ளது; இந்தப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு ஓரிரு வாரங்களில் அனுப்புகிறோம்' என்று ஊழியர்கள் தெரிவித்தனர்.
அவ்வாறு இவர்கள் புதிதாக அனுப்பும் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் பரிசீலிப்பதற்கு மிகவும் குறைவான வாய்ப்புகளே உள்ளன. ஏனென்றால், பட்டதாரி ஆசிரியர்கள் டிசம்பர் முதல் வாரத்தில் நியமிக்கப்பட உள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
சமூகத்தில் மிகவும் பின்தங்கிய எங்களது இனத்தினர் முன்னேறுவதற்காக முதல்வர் கருணாநிதி இந்தச் சலுகையை அளித்தார். ஆனால், வேலைவாய்ப்பு அலுவலக அதிகாரிகளின் மெத்தனப் போக்காலும், குளறுபடிகளாலும் சட்டப்படி எங்களுக்கான உரிமையைப் பெற முடியவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.
மாற்றுத்திறனாளிகள்,வேறு சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள் என ஏராளமானோர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இதில் அருந்ததியின சமூகத்தினரைத் தவிர
வேறு எவரும் புகாரோடு வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு வரவில்லை என்று அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
மிகச் சாதாரண குடும்பங்களைச் சேர்ந்த இவர்கள், தங்களுக்குள்ள நியாயமான உரிமைகளைக் கோரி அரசின் கதவுகளை தட்ட முடியாத நிலையில் உள்ளனர். சென்னைக்கு வந்த இரண்டு நாள்களிலேயே கைச்செலவுக்குப் பணமில்லாததால் பலர் ஊருக்குத் திரும்பிவிட்டனர். வேலைவாய்ப்பு அலுவலகம் வெளியிட்ட பட்டியலின் படி, தகுதியுள்ள அனைவரையும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்க வேண்டும். அருந்ததியின பட்டதாரிகளின் சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் முடிந்த பின்னரே ஆசிரியர் நியமன அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என்பதே இவர்களது கோரிக்கை.
நியாயமான இவர்களின் கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றால், அருந்ததியினருக்கு என்று 3 சதவீத உள்ஒதுக்கீட்டை அரசு வழங்கி என்ன பயன்?

No comments:

Post a Comment