Friday, November 26, 2010

TRB SCA VACANCIES ஆசிரியர் நியமனம்; அருந்ததியினர் விவரங்கள் தொகுக்கப்பட்டு கூடுதல் பட்டியல் அனுப்பப்படும்: வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை தகவல்

ஆசிரியர் நியமனம்; அருந்ததியினர் விவரங்கள் தொகுக்கப்பட்டு கூடுதல் பட்டியல் அனுப்பப்படும்: வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை தகவல்

First Published : 27 Nov 2010 02:57:38 AM IST


சென்னை, நவ.26: ஆசிரியர் நியமனத்துக்கான பதிவு மூப்புக்கு உள்பட்ட அருந்ததியினப் பட்டதாரிகளின் விவரங்களைத் தொகுத்து, ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு கூடுதல் பட்டியல் அனுப்பப்படும் என்று வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை தெரிவித்துள்ளது.
பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் அருந்ததியினருக்கான ஒதுக்கீடு முழுமையாக அமல்படுத்தப்படவில்லை என்றும், வேலைவாய்ப்பு அலுவலர்களின் குளறுபடியே இதற்குக் காரணம் என்றும் "தினமணி'யில் நவம்பர் 22-ல் செய்தி வெளியானது.
இதற்கு பதிலளிக்கும் வகையில், வேலைவாய்ப்பு, பயிற்சித்துறை இயக்குநரகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
வேலைவாய்ப்பு அலுவலர்களின் குளறுபடியால் ஆசிரியர் நியமனத்தில் அருந்ததியினருக்கான 3 சதவீத உள்ஒதுக்கீடு முழுமையாக அமலாகாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக பட்டதாரி ஆசிரியர்கள் தெரிவித்துள்ள புகாருக்கு மறுப்பு தெரிவிக்கிறோம்.
அருந்ததியினருக்காக தமிழக அரசு வழங்கியுள்ள 3 சதவீத உள்ஒதுக்கீட்டை செயல்படுத்துவதில் எந்தவிதக் குளறுபடியும் இல்லை. இந்த இடஒதுக்கீட்டினை அமல்படுத்திட வேலைவாய்ப்புத் துறையும், ஆசிரியர் தேர்வு வாரியமும் இணைந்து செயல்பட்டு வருகிறது.
வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவேட்டில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்ட பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பொதுப்பிரிவினர் என்று பதிவு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதனால், தாழ்த்தப்பட்ட வகுப்பு என்ற பிரிவில் அருந்ததியினர் என தனிப்பதிவு எதுவும் பராமரிக்கப்படவில்லை. அருந்ததியினர் பிரிவுக்கு தமிழக அரசு 3 சதவீத உள்ஒதுக்கீடு அளித்த பின், அதைச் செயல்படுத்த வேலைவாய்ப்புத் துறை மேல்நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, தாழ்த்தப்பட்ட அருந்ததியினப் பிரிவினர், தாங்கள் அருந்ததியினர் என்பதை உறுதி செய்யும் சான்றிதழை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அளித்து அந்தச் சான்றிதழை ஆகஸ்ட் 31, 2010-க்குள் பதிவு செய்ய வேண்டும் என செய்தி வெளியிடப்பட்டது.
வேலைவாய்ப்பு அலுவலக அறிவிப்புப் பலகையிலும் இது ஒட்டப்பட்டது.
இதன்பிறகு, ஆகஸ்ட் 31, 2010 என்ற நாளை அடிப்படையாக வைத்து, பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் "அருந்ததியினர்' பிரிவுக்கென தனிப்பட்டியல் தயாரிக்கப்பட்டது. அந்தப் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு 27.09.10-ல் அனுப்பப்பட்டது.
"அருந்ததியினர்' என்பதற்கான ஆதாரங்களை ஆகஸ்ட் 31-க்குள் அளித்துப் பதிவு செய்தவர்களின் பெயர்கள் மட்டுமே இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டன. அந்த குறிப்பிட்ட தேதிக்குள் பதிவு செய்யாதவர்களின் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அனுப்பப்படவில்லை.
இருப்பினும், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் ஆகஸ்ட் 31-க்குப் பின்னர் அருந்ததியினர் எனப் பதிவு செய்தவர்களின் விவரங்களும் இப்போது தொகுக்கப்பட்டு வருகிறது. அவர்கள் பதிவு மூப்புக்கு உள்பட்டிருப்பின் கூடுதல் பட்டியலாக ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எனவே, வேலைவாய்ப்புத் துறையில் குளறுபடி ஏதும் நடைபெறவில்லை என்றும், அருந்ததியினருக்கான இடஒதுக்கீடு அமலாவதில் எந்தவிதப் பாதிப்பும் இல்லை என்றும் வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment